
என் பெயர் ரவி. அவள் பெயர் ஜனனி. வகுப்பில் உடன் படிப்பவள்,அல்ல அல்ல படித்தவள். மூன்று வருடம் ஒன்றாக படித்தபோதும், ஊர் சுற்றிய போதும், விளையாட்டாக சண்டையிட்டபோதும், பேசியபோதும் ஒருவர் மேல் மற்றவருக்கு இருந்த ஈர்ப்பை இருவருமே உணர்ந்தோம். ஆனால் ஏனோ வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அவள் பேசும் பேச்சிலும், அன்பு கலந்த பார்வையிலும், என் தோல்விக்கு அவள் மனமுடைந்த போதும், என் இழப்பிற்காக அவள் கண்கள் பனித்த போதும் அவள் மனம் நன்றாகவே தெரிந்தது. விடுமுறையிலும் விடாமல் தொலைப்பேசுவது முறையான போதும், அவள் பிரிவு என்னை வாட்டிய போதும் தான் என் மனம் என்னவென்பது எனக்கே புரிந்தது.மாலை நேர மயக்கமும், ஒற்றை மேகமும், சினிமா பாடல்களும், தென்றல் காற்றும், குறுஞ்செய்திகளும் அவள் முகத்தை மனதில் நிழலாடி நினைவு படுத்த்திச் சென்றன. அவளுக்கு பிடித்ததாலேயே புத்தகங்களும், வார இதழ்களும் எனக்கும் பிடித்துப் போனது விந்தையிலும் விந்தை. ஒருவர் மனம் மற்றவருக்கு புரிவதற்கு முன்னமே ஊராருக்கும், நண்பர்களுக்கும் புரிந்துவிட்டது போலும், ஆனால் அவர்களின் கிண்டல்களும், கேலிப் பேச்சுக்களும் என்றுமே எங்களின் செவிமடல்களை எட்டியதே இல்லை. ஒருவர் மற்றவரின் பார்வையில் ஆறுதல அடைந்தோம். அவள் விரல் பற்றி நடப்பதும், ஒன்றாக அமர்வதும் வாழ்வின் பேரின்பத்தை தந்தன. கடவுளுடன் பேச முடியாவிட்டாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே ஆறுதல் தருவது போல காதலைச் சொல்லாவிட்டாலும், அந்த எண்ணமே ஆறுதல் தந்தது. பருவக் கோளாறு என்பார் ஒன்றும் அறியாதார்; ஹார்மோன்களின் சித்து விளையாட்டு என்பார் அறிந்து தெளிந்தோர். அது எதுவாயினும் எனக்கு அவளையும், அவளுக்கு என்னையும் பிடித்திருந்தது. கல்லூரி முடியும் கடைசி நாளின் போதும் கண்ணியமாக கைகுலுக்கி பிரிந்து போனோம். பின் நட்பை(!?) தொலைபேச்சுக்களிலும் மின்னஞ்சல்களிலும் தொடர்ந்தோம்.

வாழ்க்கை முன்வைத்த போராட்டங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்ததால் தினம் தினம் பேசியது, வாரம் ஒருமுறையாகவும், பின்னாளில் மாதம் ஒருமுறையாகவும் அதன்பின் பிறந்த நாட்களுக்கு மட்டும் எனவும் ஆனது. கடந்த இரு வருடங்களாக அவளுக்கு பிறந்த நாள் வாழத்துச் சொல்லும் போதெல்லாம் காதலைச் சொல்ல எண்ணி கடைசி நிமிடத்தில் சொல்லாமல் விட்டாயிற்று. இடையில் கைப்பேசி தொலைந்து போனபோது ஜனனியும் தொலைந்து போனாள். இன்று ஏப்ரல் பதினைந்து இன்னும் இரண்டு நாளில் அவள் பிறந்த நாள் எப்படியாவது அவளது எண்ணைக் கண்டுபிடித்தாக வேண்டும். ஒரு நண்பரின் காதலி, அவளின் ஊரிலிருந்து என்பதால் இரு நாட்களில் அவளின் எண்ணை வாங்கியாயிற்று. இந்தமுறை எப்படியும் சொல்லிவிட வேண்டும். அவள் மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் இன்னும் ஒரு வருடத்தில் கல்யாணம், அப்பறம் சென்னையிலேயே செட்டில் ஆகிவிட வேண்டியது தான். ஒரு பையன் ஒரு பொண்ணு இரண்டு வருட இடைவெளியில் அவளும் படித்திருப்பதால் இங்கேயே வேலைக்கு போக சரியாயிருக்கும்.

நாள் ஏப்ரல் 17 2009; நேரம் காலை 10 மணி 45 நிமிடம்.
"ஹலோ"
"ஹலோ" மறுமுனையில் கரகரத்த ஆண் குரல்.
"ம்.... குட்மார்னிங், ஜனனி இருக்காங்களா?"
"நீங்க யார் பேசறது?"
"ஐ ஆம் ரவி, ஜனனியோட ப்ரண்ட் பேசறேன், நீங்க?"
"நான் ஜனனியோட ஹஸ்பென்ட், அவங்க வளைகாப்புக்காக நேத்து தான் அவங்க அம்மா வீட்டுக்கு போனாங்க.."
"ஓஹோ! சரி நான் விசாரிச்சதா சொல்லுங்க..."
அதற்கு மேல் பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. கண்கள் இருட்டின, உலகம் சுற்றியது அப்படியே அருகில் இருந்த சோபாவில் விழுகிறேன்....